கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் பட்டறை அமைந்துள்ளது. இந்நிலையில் பிரசாந்த் தனது உறவினரான முனிசாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் பிள்ளாரி அக்ரகாரம் முனியப்பன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த முத்துசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரசாந்த்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.