மணலை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கட்டுபாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் சுமார் 56 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பறையன்குளம் கிராமத்தில் நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கமுதி-அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள காவடிபட்டியில் ஆட்டுக்கிடை போடுவதற்கு நாகராஜன் மற்றும் முனியசாமி அனைத்து ஆடுகளையும் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அருப்புக்கோட்டையிலிருந்து கமுதியை நோக்கி மணல் ஏற்றி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுபாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் சுமார் 56 ஆடுகள் லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் ஆடுகளின் உரிமையாளர் நாகராஜனும் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் அதனை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக நாகராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கமுதி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதனையறிந்து சம்பவ இடத்திற்கு திரண்டு வந்த பறையன்குளம் கிராம மக்கள் உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கீழராமநதி ஊராட்சி தலைவர் அழகர்சாமி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு உடனடியாக சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்ல கேட்டுகொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.