திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வக்ராநல்லூர் நீர்மங்கலம் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகத்தியன் (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அகத்தியன் தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூர் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அகத்தியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனரான முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.