டாரஸ் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் பேக்கரி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள இறையமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விட்டம்பாளையத்தில் பேக்கரி கடை நடத்தி வரும் நிலையில், இவரது கடையில் சிவகாசியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் இறையமங்கலத்தில் இருந்து பேக்கரி கடைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து பெரும்பாளையம் புதூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டாரஸ் லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து கார் மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் கண்ணன் மற்றும் தங்கராஜ் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரை மீத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மொளசி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.