லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை, மகன், மகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை காந்திநகர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரி என்ற மகனும், மோனிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரமாக நின்ற லாரி மீது கோபிநாத்தின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லாரியின் பின்புறத்தில் சிக்கி கோபிநாத், கிரி, மோனிகா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.