உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நான்கு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நான்கு பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்த நான்கு பேரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. மேலும், இவர்களது வீட்டின் அருகே உள்ள மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் கோடரி போன்ற கொடூர ஆயுதங்களால் நான்கு பேரையும் அடித்துக் கொலை செய்ததும், உயிரிழந்த சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.