பாகிஸ்தான் சுமார் 2600 கிலோ மீட்டர் எல்லை பகுதியை ஆப்கானிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிக்குள் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும் அமெரிக்க படைகளுக்கு எதிரான சண்டையின்போது இந்த குழுவினர் தங்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதால் தலிபான் தலைமையிலான அரசு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தது. ஆனால் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்ததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று பாகிஸ்தான் தலிபான் ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் குனார் மற்றும் கோஸ்ட் மாகாண பகுதிகளில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதலை நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தலிபான் தலைமையிலான அரசு ஆப்கான் எல்லை பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.