ஜோ பைடன் ஜனாயதிபதியாக பொறுப்பேற்பதை எதிர்த்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற ஜனவரி 20ஆம் தேதி 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் குடியரசு கட்சி ஆதரவாளர்களுக்கும், ஜனநாயகக்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றி செல்லாது எனவும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் முடிவை தன்னால் ஏற்க முடியாது என்று அறிவித்து உள்ளார். இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் தற்போது அமெரிக்கா தெருக்களில், தேர்தல் முடிவுகளை திருடாதே! என்று முழக்கமிட்டு பேரணி செல்கின்றனர். மேலும் அவர்கள் “தேர்தலில் வென்றோம் இன்னும் 4 ஆண்டுகள் நம் ஆட்சியே”என்று கடுமையாக முழக்கமிட்டு வருகின்றனர். ஜார்ஜியா பென்சில்வேனியா மற்றும் அரிசோனா மாகாணங்களில் தற்போது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ஜார்ஜியா மகாணத்தில் பைடன் வென்றுள்ள நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த வெற்றியில் மோசடி நடந்துள்ளது. எனவே பைடனை கைது செய்யுங்கள் என்று தெருவில் முழக்கமிட்டு வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினரால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். எனினும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதங்களை கையில் எடுத்து வருவதால் இனி வரும் நாட்களில் அமெரிக்கா பல பிரச்சனைகளை சந்திக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.