கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் கார்டன் அவென்யூ பகுதியில் ஆடிட்டரான அகமது செரீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகமுனிஷா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அகமது வீட்டில் இருந்த கேஸில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவி இருந்துள்ளது. இதனை கவனிக்காமல் நாகமுனிஷா அதிகாலை நேரத்தில் பால் காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இதற்கிடையில் படுகாயமடைந்த அகமது மற்றும் நாகமுனிஷா ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.