சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை கலைஞர் நகர் 14-வது தெருவில் ரோஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சங்கர் ராஜ் ஆவடி ராஜீவ்காந்தி நகரில் டீக்கடை நடத்தி வருகிறார். சங்கராஜுக்கு அனிதா என்ற மனைவியும், கீர்த்திகா என்ற மகளும், கௌதம் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இதனை அறியாமல் ரோஜா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் ரோஜா, சங்கர்ராஜ், கீர்த்திகா, கௌதம் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.
மற்றொரு அறையில் அனிதா இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி ஆகிய அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்தது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பற்றி எறிந்த தீயை அணைத்தனர். பின்னர் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சென்னை கீழ்ப்பக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது கியாஸ் சிலிண்டரில் இருந்த ரெகுலேட்டரை 2 நாட்களுக்கு முன்பு தான் புதிதாக வாங்கி மாட்டியுள்ளனர். ஆனால் அதனை சரியாக பொருத்தாமல் இருந்ததால் தொடர்ந்து கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.