ஆம்பூர் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்காடு அருகில் தண்டுக்காரஹல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் 46 வயதான சுரேஷ்குமார். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலூரில் இருந்து தர்மபுரி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் செல்லும்போது சென்னை சேத்துப்பட்டு பகுதியில் வசித்து வந்த 28 வயதான இசாம் என்பவர் எதிரே காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரில் தந்தை ஏஜாஸ் அஹமத், தாயார் பாய்சா ஆகியோர் உடன் இருந்தார்கள். இந்நிலையில் இசாம் ஓட்டி வந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மருத்துவர் சுரேஷ்குமார் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் காரின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட டாக்டர் சுரேஷ்குமார் படுகாயம் அடைந்துள்ளார். மற்ற மூன்று பேரும் காயமடைந்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.