ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாமல்லபுரம் புறவழி சாலையிலிருந்து மூன்றுபேரை சவாரி ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அதன் பின் மீண்டும் மாமல்லபுரம் வருவதற்காக அவர்களை ஏற்றிக்கொண்டு ஓட்டல் எதிரே உள்ள வளைவில் திரும்பும் போது கடம்பாடியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று இவர் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு தலைகீழாக கவிழ்ந்தது. இந்த ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். மேலும் மற்ற மூன்று பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.