அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகில் அரியகோஷ்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் என்ற சிவப்பிரகாசம்(47). இவருக்கு சுகுணா(33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள். சிவப்பிரகாசம் கடந்த 7ஆம் தேதி மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி தெருவில் வசித்த முத்துக்குமரன் என்பவருடன் பைக்கில் சிதம்பரம் நோக்கி சென்றார். பைக்கை சிவப்பிரகாசம் ஓட்டி சென்றுள்ளார். அப்போது முட்லூர் – சிதம்பரம் புறவழிச்சாலை மண்டபம் மெயின் சாலையில் வரும்போது கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து சிவப்பிரகாசம் ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிவப்பிரகாசம் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னாலிருந்த முத்துக்குமரன் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பலியான சிவப்பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.