பயங்கரவாத தாக்குதலில் வெடிகுண்டு வெடித்து சிதறியதால் 8 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் தங்களது ஆதிக்கத்தால் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் வெளிநாட்டு பயணிகளை குறி பார்த்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அடாவாடி தனத்தை ஒடுக்குவதற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப் படைகள் கடுமையாக போராடி வருகின்ற நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் பயங்கர குண்டு வெடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். அதாவது மொகாதிசுவின் வார்ட்டா நப்பாடா மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தின் நுழைவாயிலுக்கு அருகே வெடிகுண்டுகளை அடைத்து வைத்த காரை நிறுத்தி, அதனை வெடிக்கச் செய்துள்ளனர்.
அப்போது வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த குண்டு வெடிப்பில் அந்த பகுதி முழுவதும் அதிர்ந்து கரும்புகை மண்டலமாக மாறிவிட்டது. இந்த பயங்கர குண்டு வெடிப்பில் ராணுவ தளத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் செயல்பட்டுக் கொண்டிருந்த 8 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 14 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை. இருந்தாலும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டு இருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.