வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதிய கோர விபத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதாவது, டாக்கா புறநகரில் பாயும் சிட்டலக்சயா நதியில் ஏறத்தாழ 50 பேருடன் சென்ற பயணிகள் படகு மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படகில் பயணித்த நபர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். அதன்பின் அருகில் இருந்தவைகளை பிடித்து சிலர் உயிர் தப்பிய நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த விபத்தில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்வதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.