தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்தவகையில் விழுப்புரம் அருகே வளவனூர் அடுத்த நாரையூர் கிராமத்தில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் நிறைவேற்றிய கையோடு உடனே அமல்படுத்தப்பட்டது.
திமுக அரசு மக்களின் பிரச்சினையை அறிந்து உடனே நிறைவேற்றி வருகிறது. கடந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுகவினர் பயந்தனர். ஆனால் நாங்கள் அப்படியில்லை. மக்களின் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்புகள் மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.