கஞ்சா செடிகளை பயிரிட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையை முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல்துறையினர் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் 10-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது. அந்த கஞ்சா செடிகளை காவல்துறையினர் வேருடன் பிடுங்கி எடுத்து பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் துலால் தப்பா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தேயிலை தொழிற்சாலையில் டீ மேக்கராக பணியாற்றி வருகிறார். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளை சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.