பயிர்க்கடன் தள்ளுபடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் கொடுத்த பரிசை முதல்வர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் முதல்வர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 2 விவசாயிகள் முதல்வரை வரவேற்பதற்காக கூட்டத்தில் நின்று எதிர்பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதையடுத்து முதல்வர் வந்தவுடன் முண்டியடித்துக்கொண்டு விவசாயிகள் இருவரும் தாங்கள் கொண்டுவந்த ஏர்கலப்பையுடன் நிற்கும் எம்ஜிஆரின் வெண்கல சிலை மற்றும் அம்மன் சிலையை பரிசாக முதல்வரிடம் கொடுத்துள்ளனர். மலர்ந்த முகத்துடன் அவர் அதைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ரொம்ப சந்தோஷம் என்று கூறி விவசாயிகளின் தோளைத் தட்டியுள்ளார். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொடுத்துள்ளோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.