தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணம் மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையும், பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25% வரையும், ஒன்றிய அரசும் 60%முதல் 65% வரையும், மாநில அரசு பங்குடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, வேளாண்மைத் துறையால் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பா பருவத்தில் சம்பா நெற்பயிர், பருத்தி, மக்காச்சோளம், மற்றும் வெங்காயம் போன்ற பயிர்கள் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டதை அடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாக கடந்த 23ஆம் தேதி முதல் ஒன்றிய அரசின் தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்வது குறித்து நடப்பு தகவல்களை பற்றி உழவன் செயலி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு தமிழக அரசு கேட்டுக்கொள்கின்றன.