மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலை ஜோன்ஸ்புரம் 4-வது தெருவில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லெனிட்டா ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுவேல் தனது மனைவியை டெட் தேர்வு பயிற்சிக்கு கருமாத்தூரில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இவர்கள் திருமங்கலம்- சமயநல்லூர் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்த போது மதுரை நோக்கி வேகமாக சென்ற கார் சாமுவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதற்கிடையே காரில் பயணம் செய்த பாலாஜி, கார்த்திகா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமுவேல், பாலாஜி, கார்த்திக் ஆகிய 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் ராணியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.