தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் கடந்த 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தமிழக அரசு போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இந்த பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடின் அடிப்படையில் தற்காலிகமாக தற்போது நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் செய்வதாக ஏகனாபுரம் கிராம குடியிருப்பு மற்றும் விவசாய கூட்டமைப்பினர் தற்போது முடிவை அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக ஏர்போர்ட் அமையக்கூடாது, இதனால் வாழ்வாதாரம், எங்களுடைய அடையாளம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதை முன்னிறுத்தி 13 கிராமங்களை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த நிலையில் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் கோட்டையை நோக்கி பேரணியை அறிவித்திருந்தனர். இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த அமைச்சர் ஏ.வா வேலு தலைமையில் ஏகனாபுரம் கிராம குடியிருப்பு மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் 8 பேர் கொண்ட அந்த பிரதிநிதி குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தா.மோ அன்பரசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.. இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக இந்த போராட்டத்தை நாங்கள் வாபஸ் செய்கிறோம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
4700 ஏக்கரில் பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ளதாக மத்திய, மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அங்கு 1500 க்கும் மேற்பட்ட வீடுகள், 1700 இல் இருந்து 2000 வீடுகள் என்பது இருக்கக்கூடிய நிலையில் ஒட்டுமொத்தமாக விமான நிலையம் அமைக்கப்பட்டால் வாழ்வாரம் பாதிக்கப்படும், நிலங்கள், வீடுகள் அனைத்தும் வரைபடத்தின் கீழ் வருவதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை மூலமாக வரைபடத்தில் மாற்றம் செய்ய முடியுமா? அதே போல கிராம மக்களின் கருத்துக்கள் என்ன என்பதை அமைச்சர்கள் கேட்டு முதலமைச்சர் இடம் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து இந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளனர்.