தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு சர்வதேச ஒப்பந்தம் கோரியுள்ளது. இதற்காக தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசர்களை வரவழைத்து டிட்கோ விளம்பரம் செய்துள்ளது. அதன்பிறகு விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்வதோடு, சென்னை விமான நிலையம் இடையேயான சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தொடர்பாக ஆய்வுகளை செய்ய வேண்டும். மேலும் விமான நிலையங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் நிறுவனங்கள் ஜனவரி 6-ம் தேதிக்குள் ஒப்பந்த புள்ளியை அனுப்புவதோடு அதில் 2069-70 ஆண்டுகள் வரை எதிர்கால கணிப்புகளும் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.