மதுரை மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் முன்பாக பாஜக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏவாக திமுக உறுப்பினர் டாக்டர் சரவணன் இருந்தார். ஆனால் தற்போது நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் சரவணனுக்கு திமுக கட்சி சார்பில் சீட்டு ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் நேற்று காலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து சரவணன் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியது .
இந்நிலையில் பாஜக உறுப்பினரான சீனிவாசன் என்பவர் இத்தொகுதி தனக்கு தான் ஒதுக்கப்படும் என நினைத்து கே.புதூரில் புதிதாக பாஜக தேர்தல் அலுவலகம் தொடங்கி கட்சிப் பணிகளை கவனித்துள்ளார் . ஆனால் பாஜகவின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த சீனிவாசனும், உறுப்பினர்களும் புதூர் பாஜக தேர்தல் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து பாஜகவின் சில முக்கிய பிரமுகர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.