குடிநீர் குழாயை சரி செய்ய கோரி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கால்பாலத்தடி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து குழித்துறை சந்திப்பு வரை புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று இதற்கான பணிகள் நடைபெற்றது. அப்போது திடீரென பழைய குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனை பார்த்து அப்பகுதி மக்கள் உடனடியாக வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்துவிட்டு கிளம்பினர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக குழாய் சரி செய்யப்படும் என உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.