தொட்டி இடிந்து விழுந்ததில் 7 பெண்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று 6 ஆண்கள், 48 பெண்கள் என 54 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூய்மை பணி செய்து கொண்டிருந்தனர். அதில் ராஜேஸ்வரி, ஆண்டாள், மீனாம்பாள், அன்பரசி, அம்பிகா, லதா, பரிபூரணி ஆகியோர் பள்ளியின் பிரதான கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள கழிவறை பகுதியில் தூய்மை பணி செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த கழிவறை தொட்டியின் மீது ஏறி நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென தொட்டியின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாய் உடைந்தது. இதில் நடந்து சென்ற 7 பேரும் உள்ளே விழுந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்து ராஜேஸ்வரி ஆண்டாள் ஆகிய 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர்.