பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பூடையார் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் வைத்து கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.
மேலும் இதே நிலைமை நீடித்தால் பள்ளி விரைவில் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர்களிடம் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கேட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பவானி மாணவர்களின் பெற்றோர் தவிர அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர் பயிற்சி பயிற்றுனர் சாந்தி அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணிவித்து விட்டு வெளியே சென்றுள்ளனர்.