பாரத மக்கள் கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் தாக்கப்பட்ட நிலையில், அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாநகராட்சி 1 ஆவது வார்டில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதே போல அந்த மாநகராட்சியில் 1 ஆவது வார்டில் பாரத மக்கள் கட்சி தலைவரான கதிர்வேல் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். கடந்த 17 ஆம் தேதி காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்த போது அப்பகுதியில் அரசியல் கட்சியினர் வாக்காளருக்கு பணம் கொடுத்ததாகவும், இதை கண்டு பாரத மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் கதிர்வேல் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா செய்யக் கூடாது என்று அவர்களிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி அவர் காலையில் வீட்டில் இருந்தபோது, திடீரென வந்த சில நபர்கள் சரமாரியாக தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த அவர் உடனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்ட த்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த உதவி கமிஷனர் வெங்கடேசன், டவுன் இன்ஸ்பெக்டர் சம்பங்கி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் கதிர்வேலை சமாதானப்படுத்தினர். பின்னர் அவரை போலீசார் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் இருக்கும் தேர்தல் பிரிவு அலுவலகத்திலும் சுயேச்சை வேட்பாளர் புகார் மனு கொடுத்துள்ளார்.