இலங்கை முன்னாள் அதிபர் நாளை நாடு திரும்புகிறார்.
இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த மாதம் தொடக்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் ஜூலை 13-ஆம் தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். இதனையடுத்து அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததால் கடந்த 11-ஆம் தேதி தாய்லாந்துக்கு சென்றார்.
அங்கு தலைநகர் பங்காக்கில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் பாதுகாப்பாக இருக்குமாறு கூறி தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த மாதம் இறுதியில் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் வந்தால் நாட்டு மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் அவர் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தார் . இதனையடுத்து ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுனா கட்சி தற்போதைய அதிபராக ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை கோத்தபய ராஜபக்சே தனது சொந்த நாட்டிற்கு வருகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.