ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
கரூர் மாவட்டத்திலுள்ள கழுவூர் பகுதியில் கலையரசன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருக்கும் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில பிரச்சினைகள் இருந்ததால் பரிகாரம் செய்வதற்காக கலையரசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து பரிகாரம் செய்யப்பட்ட தகரத்தினாலான தகடை ஆற்றில் விடுவதற்காக கலையரசனுடன் சுரேந்தர்(17), அருண்குமார்(22) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அந்த தகடை ஆற்றில் விட்டு விட்டு கலையரசன் கரைக்கு வந்துள்ளார்.
அப்போது குளித்து கொண்டிருந்த சுரேந்தர் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருண்குமாரும், கலையரசனும் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.