பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாத்திரக் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு ஜான் பேகம் (65) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் ஜான் பேகத்திடம் தான் ஒரு மந்திரவாதி என்று கூறியுள்ளார்.
இவர் ஜான் பேகத்திடம் உங்கள் வீட்டில் பெரிய பிரச்சனை இருக்கிறது என்றும், அதற்கு உடனடியாக பரிகாரம் செய்யாவிட்டால் பிரச்சனை அதிகமாகும் என்றும் கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த ஜான் பேகம் பரிகாரத்திற்கு சம்மதித்து 3/4 பவுன் கம்மல் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை மந்திரவாதியின் தட்டில் வைத்துள்ளார். அதன்பிறகு மந்திரவாதி வீடு முழுவதும் சாம்பிராணி புகையை அதிக அளவில் பரப்பி விட்டார். இதனால் வீடு புகை மண்டலமாக காட்சியளித்தது. உடனே மந்திரவாதி அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் பேகம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் மந்திரவாதி போல் ஒரு நபர் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.