மருத்துவமனையின் ஜன்னல் வழியாக கைதி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியில் சேக் உதுமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த கீழக்கரை அனைத்து மகளிர் காவல் துறையினர் சேக் உதுமான் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே சேக் உதுமான் தனக்கு ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.
இதனால் நீதிபதி அவரை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவல்துறையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சேக் உதுமானை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு சேக் உதுமான் கழிவறைக்கு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கழிவறைக்கு அனுப்பி விட்டு வெளியே காத்திருந்தனர்.
இந்நிலையில் கழிவறை உள்ளே சென்ற சேக் உதுமான் அங்குள்ள ஜன்னல் வழியாக ஏறி குதித்து தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து பணியில் அஜாக்கிரதையாக இருந்த காவல்துறை அதிகாரி முருகன் மற்றும் ராஜு ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.