புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே பிறந்து அரை மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை வாய்க்காலில் வீசி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திப்படுகை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவு நீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் குழந்தை இறந்து கிடந்தது. பிறந்து சிலமணிநேரமே ஆன தொப்புள் கொடி அறுக்காத நிலையில் குழந்தை இறந்து கிடந்ததால், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின் தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரேணுகா (35) முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, ரேணுகாவிற்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருமணத்தை தாண்டிய உறவால் குழந்தை பிறந்தது தெரியவந்தது.
ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்வதற்காக பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை தொப்புள் கொடி அறுக்காமல் அப்படியே வாக்காலில் வீசி கொன்றது அம்பலமானது. பெற்ற தாயே குழந்தையை வாய்க்காலில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேணுகாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.