வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, ஒன்றிய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர காவல் படை, கப்பற்படை, விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும், துறைத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது தலைமைச் செயலாளர் இறையன்பு பேசியதாவது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை போன்றவைகள் மழை நீரை சேமித்து வைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மீட்பு நடவடிக்கையின் காரணமாக சமீப காலமாகவே ஆறுகளில் ஏற்படும் பெருக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்ததோடு, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
பேரிடர் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக போதுமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து முன்னெச்சர்க்கை பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு திடீரென பெய்யும் குறைந்த அளவு மழையினால் கூட சில பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து கொள்வதோடு, வீடுகளிலும் தண்ணீர் புகுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை தடுப்பதற்கு ஏதுவாக வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே முன் கணிப்பு தகவல்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் பயணம் செய்யும் நேரத்தை வரையறை செய்து கொள்வார்கள். அதோடு போக்குவரத்து நெரிசலும் குறையும். இது தொடர்பான தகவல் பரிமாற்ற சேவைகளை இந்திய வானிலை ஆய்வு மையம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, சென்னை பெருநகர காவல் ஆணையர் போன்றவைகள் இணைந்து செயல்பட வேண்டும்.
பேரிடர் காலங்களின் போது பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முகாம்களை தயார் நிலையில் வைத்திருப்பதோடு அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் தங்கு தடையின்றி கிடைப் பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் கையிருப்பில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களின் போது சாலைகளை உடனுக்குடன் சரி செய்வதோடு, பொது மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கு தங்களுடைய வீரர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதன்பின் ஏரிகள் மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்துவதோடு, பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சி துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை போன்றவைகள் கால்வாய்கள், நீர் வழிகள் மற்றும் மழைநீர் வடிகல்களை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கரைகளை பலப்படுத்துவதற்கு தேவையான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருத்தல், சமுதாய உணவுக்கூடங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் போன்றவைகள் வெள்ள நீரை வெளியேற்றும் பம்பு செட்டுகளை தயார் நிலையில் வைத்திருத்தல், தொற்றுநோய் குறித்து சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடைகளை முறையாக பராமரிப்பதற்கான ஆலோசனைகளை உரிமையாளர்களுக்கு வழங்குதல், பொதுமக்களை தங்க வைப்பதற்கான கூடுதல் முகாம்களை தயார் நிலையில் வைத்திருத்தல், மழை நீர் வடிகால்கள் கட்டும் பணிகளை ஆய்வு செய்தல், மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துதல் மற்றும் பேரிடர் காலங்களின் போது அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.