கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு நீர் வீழ்ச்சி (கவியருவி) இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் நீரோடைகள் வாயிலாக நீர்வரத்து இருக்கிறது. இங்கு கோவை மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பாக நீர்வீ ழ்ச்சியில் தடுப்பு கம்பிகள் அமைத்து கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக குழந்தைகள், பெண்கள் பயப்படாமல் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
இதனிடையில் தற்போது பெய்துவரும் தென் மேற்கு பருவ மழையால் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தில் தடுப்புகம்பிகள் அடித்து செல்லப்பட்டதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியிருப்பதாவது “குரங்கு நீர் வீழ்ச்சியில் வனத்துறை சார்பாக சுற்றுலா பயணிகளுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் யானைகள், புலிகள், மான்களின் உருவம் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
மேலும் பெண்கள், குழந்தைகள் நீர் வீழ்ச்சிக்கு நடந்துசெல்ல வசதியாக படிக்கட்டுகள், தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனிடையில் வனத்துறையினர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதை தடுக்க உரிய ஆய்வு செய்து நிரந்தர தீர்வுகாண வேண்டும். அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள்.