திசையன்விளை பகுதியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திசையன்விளை பகுதிகளில் முருங்கைக்காய் அதிக அளவில் பயிரிடப்பட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.முருங்கை வறட்சிப் பயிர் என்பதால் அதற்கு வெயில் அதிகம் தேவை. தற்போது வடமாநிலங்களில் மழை பெய்து வருவதால் அங்கு முருங்கை விளைச்சல் இல்லை. இங்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. வெயில் அதிகம் உள்ளதால் பூக்கள் அனைத்தும் காயாகி உள்ளது.
கடந்தஆண்டு அக்டோபர் மாதம் பெய்யத் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் முருங்கக்காய் கிலோ ரூ. 15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மழை பெய்யாமல் கடும் வெயில் அடிக்கிறது. இதனால் திசையன்விளை மார்க்கெட்டில் நேற்று முருங்கக்காய் கிலோ ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்டது . இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை தாமதம் அடைந்தால் முருங்கைக்காய் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.