Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பர்கூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தொகுதி உதயமானது. ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக முதலமைச்சரானார். அடுத்தத் தேர்தலிலேயே அவர் படு தோல்வி அடைந்ததும் பர்கூரில் தான். மாம்பழ சாகுபடியில் முன்னணி வகிப்பதோடு, குட்டி சூரத் என அழைக்கப்படும் அளவிற்கு ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்குவது தொகுதியில் சிறப்பம்சம். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவாக அதிமுகவின் ராஜேந்திரன் உள்ளார். பர்கூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,46,269 ஆகும். மிகக் குறுகிய சாலைகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக குற்றம் சாட்டும் மக்கள், சாலைகளை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளதாகவும் அதற்கு தீர்வு காண ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். மினி சூரத் என அழைக்கப்படும் பர்கூரில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.

அண்டை மாநிலங்களை போல மா உற்பத்திக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும், மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. தொகுதி எம்எல்ஏ மக்களை சந்திப்பது இல்லை என்பதும், நலத்திட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விவசாயிகள் நவீன தொழில் நுட்பங்களைப் பயன் படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும். நீண்டகால கோரிக்கைகள், நிறைவேறாத வாக்குறுதிகளுடன் பர்கூர் தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |