கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குண்டப்புராவிலுள்ள பியூ அரசுக் கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து கர்நாடகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் கூறியுள்ளதாவது, பள்ளி கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணியும் விவகாரம் தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இது பற்றி நான் பேச விரும்பவில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை அரசு ஏற்கும் அதுவரை மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.