மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்ததாக வி.சி.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அகரதிருகோலக்கா தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தி.மு.க. சார்பாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரி சிவாஜி தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது வி.சி.க. நகர பொருளாளர் மணிமாறன், அதே பகுதியில் வசித்து வரும் தி.மு.க. வார்டு பிரதிநிதி ராஜகௌதமன் ஆகிய இருவரும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரிடமும் இருந்த தி.மு.க. துண்டு பிரசுரம், வாக்காளர் பட்டியல், ரூ.7,500 ரொக்கம் ஆகியவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.