குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குவைத்திலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் 164 பேர் பயணம் செய்தார்கள். விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்த போது அதில் பயணித்த தஞ்சாவூரில் வசித்த 54 வயதுடைய சேவியர் என்பவர் விமானம் கழிவறைக்கு சென்று திடீரென்று சிகரெட் பிடித்தார்.
இதைப்பார்த்த மற்ற பயணிகள் அவரை புகைபிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன்பின் உடனே விமான பணிப்பெண் அங்கு வந்து விமானத்திற்குள் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று அவருக்கு எடுத்து கூறினார். மேலும் இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்தார். அதன் பின்னர் குவைத் விமானம், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.
அப்போது அங்கு நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி புகை பிடித்த பயணியை விமானத்திலிருந்து கீழே இறக்கினார்கள். அதன்பின் அவரை பாதுகாப்புடன் குடியுரிமை சோதனை, சுங்க சோதனை செய்த பிறகு, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.