வேதாரணியத்தில் பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி, குதிரை ஆகியவை உள்ளது. இந்த சரணாலயத்திற்கு எதிரே சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருடம் தோறும் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 290 வகையான பறவைகள் வந்து தங்கி செல்கின்றது.
இந்த சரணாலயத்திற்கு ஆறு மாத சீசன் காலத்தில் இங்கு வந்து தங்கி செல்லும் பறவைகளை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பறவைகளின் அழகை காண முனியப்பன் ஏரி முன்பு பார்வையாளர்கள் கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால் கஜா புயலின் போது அந்த கோபுரம் இடிந்து விழுந்ததால் பறவைகளின் அழகை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் நலன் கருதி திருச்சி தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகைவன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆகியோர் உத்தரவின் பேரில் 5 லட்சம் ரூபாய் செலவில் அதே இடத்தில் புதிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் விரைவில் சுற்றுலா பயணிகளின் பார்வையிட திறக்கப்படும். அதேபோல் வனவிலங்குகளை கண்டு ரசிப்பதற்கு முன்னங்காடு பகுதி ராமர் பாதம் பழைய சோழர்கால கலங்கரை விளக்கம் அருகிலும் பார்வையாளர்கள் கோபுரம் அமைந்துள்ளது.