கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேபி முனுசாமி திடீரென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த சூளகிரி அருகே ஓசூர் ஐந்தாவது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காகநாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள சுமார் 3,034 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பகுதியில் 5000 தென்னந்தோப்பு, மாந்தோப்பு, 30க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள், 100க்கும் மேற்பட்ட பசுமைக்குடி என்று 2000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் சார்ந்த அமைந்துள்ளது. இந்நிலையில் சிப்காட் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டியிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும் அரசு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று காலை 7 மணி முதல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கேபி முனுசாமி சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.