Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று… வேரோடு சாய்ந்த தென்னை, வாழை மரங்கள்… பெரும் சேதம்…. கவலையில் விவசாயிகள்….!!!!!!

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் பாயும், காவிரி ஆற்றின் வடிநில பகுதிகளில் அமைந்துள்ள உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் பில்லுக்குறிச்சி மற்றும் சித்தூர் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு ஏதுமின்றி, கடுமையான வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் சிறு மழை தூறல்களுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அந்தபகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பாக்கு மற்றும் மா உள்ளிட்ட மர பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

பலத்த சூறைக்காற்றால் பிரதான சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல இடங்களில் வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தது. மரங்கள் முறிந்து மின்பாதையில் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வருவாய் ஆய்வாளர் வனஜா, வேலாயுதம், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் அனுஜா, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு  வருகின்றனர்.

இதுபற்றி பூலாம்பட்டி அடுத்த ஓனாம்பாறை பகுதியை சேர்ந்த விவசாயி ராமசுந்தரம் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விவசாய விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் இப்பகுதி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது வீசிய சூறைக்காற்றால், அறுவடை செய்ய இன்னும் குறுகிய காலமே இருந்த நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

தங்களுக்கு பெரிய அளவிலான பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றார்.

Categories

Tech |