Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பலமுறையா?…. இப்படி பொய் சொல்லாதீங்க தீப்தி….. சாடிய இங்கிலாந்து கேப்டன்..!!

இந்தியா பலமுறை எச்சரித்ததாக தீப்தி ஷர்மா கூறிய பிறகு, இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட், “எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை” என்று மறுத்துள்ளார்..

இந்திய மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி கடந்த 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.. இதனால் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..

இப்போட்டியில் இங்கிலாந்து சேஸ் செய்யும்போது 35.2 ஓவரில் 118/9 விக்கெட் இழந்து தவித்தபோது சார்லி டீனுடன், டேவிஸ் ஜோடி சேர்ந்தார். 40 பந்துகளில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது 44ஆவது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.. அந்த ஓவரின் 3ஆவது பந்தை தீப்தி வீசுவதற்கு முன்பாகவே நான் -ஸ்ட்ரைக்கில் இருந்த சார்லி டீன் கோட்டை விட்டு வெளியேறி ரன் எடுக்கமுயன்றார். அப்போது மன்கட் முறையில் தீப்தி ரன் அவுட் செய்து அம்பெயரிடம் அவுட் கேட்டார்.. இதையடுத்து 3ஆவது நடுவரிடம் கேட்கப்பட, டிவி ரீபிளேவில் அவுட் என வந்தது.. இதனால் 47 ரன்கள் எடுத்திருந்த டீன் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.. இந்தியாவும் வென்றது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத டீன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.. அவரை சக வீரரான டேவிஸ் தேற்றினார்.. இந்த அவுட்டால் பெவிலியனில் இருந்த இங்கிலாந்து வீரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.. இதற்கு பலரும் ஐசிசி விதிகளில் உள்ளதை செய்ததாக பாராட்டினாலும், சிலர் ஒருமுறை அவரை எச்சரித்திருக்கலாம் இப்படி அவுட் செய்திருக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.. இந்த அவுட் கிரிக்கெட் ஆன்மாவுக்கு எதிரானது என ஸ்டுவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர். அதேநேரத்தில் இந்திய வீரர் அஸ்வின், சேவாக் உள்ளிட்ட பலரும் இது விதிமுறைக்கு உட்பட்டது என ஆதரவு தெரிவித்தனர்.

இந்ந சூழலில் தீப்தி சர்மா மன்கட் சம்பவம் குறித்து விளக்கமளித்தார்.. அவர் கூறியதாவது, கிரீஸை விட்டு வெளியேற வேண்டாம் என்று சார்லி  டீனை எச்சரித்தோம், “நாங்கள் நடுவர்களிடமும் தெரிவித்தோம், ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அதையே செய்தார். எனவே நாங்கள் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தான் அவுட் செய்தோம் என்று தெரிவித்தார்..

இந்நிலையில் இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் தீப்தி சர்மா அளித்த விளக்கத்திற்கு பின் பதிலளித்துள்ளார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்காத ஹீதர் நைட் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்டம் முடிந்தது, சார்லி சட்டப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார். போட்டியிலும் தொடரிலும் இந்தியா வெற்றி பெற தகுதியானது. ஆனால் எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் அதனை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை, அதனால் சார்லியின் விக்கெட்டை முறைப்படி எடுக்கவில்லை என்று ஆகிவிடாது. ரன் அவுட் செய்தது சரியாக இருந்தால், எச்சரிக்கை பற்றி பொய் சொல்லி அதை நியாயப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தியா உணரக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்..

 

Categories

Tech |