திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை, அதிமுகவில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா டெல்லி விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகு சசிகலா புஷ்பா திருச்சி சிவாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, நெருக்கமாக இருப்பது, அவருடைய மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து சசிகலா புஷ்பா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை தாக்கியதாக பரபரப்பு புகார் ஒன்றை ராஜ்யசபாவில் எழுப்பினார். இதையடுத்து ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா புஷ்பா அதிமுகவில் முக்கிய பதவிக்கு வருவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2016-ஆம் ஆண்டில் சசிகலா புஷ்பா அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்தார்.
பின்னர் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் அதற்கான வேட்பு மனுவை வாங்க அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரை தொண்டர்கள் கடுமையாக தாக்கி விரட்டி விட்டனர். இதையடுத்து சசிகலா புஷ்பா அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மேலும் சசிகலா புஷ்பா பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மீது எந்த விதமான விமர்சனங்களும் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது கணவர் வழக்கறிஞர் ராமசாமி சசிகலா புஷ்பா மீது காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் வழக்கறிஞர் ராமசாமி, “மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு காரில் என் மகளுடன் சென்னை நோக்கி வந்தேன். அதன் பிறகு ஜீவன் பீமா நகரிலுள்ள என்னுடைய வீட்டிற்கு வந்து கதவை தட்டினேன்.
அப்போது என் வீட்டிற்குள் இருந்த அமுதா என்பவர் கதவை திறந்தார். மேலும் வீட்டிற்குள் சாராய நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் சிதறிக்கிடந்தது. எனது மனைவி சசிகலா புஷ்பா படுக்கையறையில் படுத்து இருந்தார். அதேபோல் மற்றொரு படுக்கையறையில் அரைகுறை ஆடையுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருந்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் உடனே செல்போனை எடுத்து அதில் வீடியோவாக பதிவு செய்தேன்.
ஆனால் அமுதா என்பவரும், அந்த நபரும் என்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு மிரட்டவும் செய்தனர். எனவே கணவன் என்கிற முறையில் எனக்கு தெரியாமல் அவர்களுக்கு வீட்டில் அனுமதி கொடுத்த மனைவி சசிகலா புஷ்பா மீதும், எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகாரில் கூறியுள்ளார். இந்த விவகாரம் அதிமுக, பாஜக இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.