விஷம் குடித்து தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா , பரணிதரன் என்ற 2 குழந்தைகளும் இருந்துள்ளனர் . இந்நிலையில் கடந்த 18-ஆம் தேதி வேல்முருகன் தனது மனைவி பரணி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து சாம்பார் சாதம், தயிர் சாதம், பலாப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு குளிர் பானங்களை குடித்துள்ளனர். அப்போது திடீரென 4 பேரும் மயங்கி விழுந்தனர்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து பரணி காவல்துறையினரிடம் எனக்கும் எனது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து எனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே பரணியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.