பலாப்பழம் சாப்பிட்ட தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகளும், பரணிதரன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பரணி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் உணவு அருந்திவிட்டு பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரணியை அவரின் மகன் உடல் அடக்கத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் திடீரென பரணிக்கு உடல் நலம் சரியில்லாமல் போக அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரணியும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இனியாவுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே 2 பேரும் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.