பல்பொருள் விற்பனை அங்காடியில் இருந்த பணத்தை மூதாட்டி திருடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி சுலைமான் நகர் பகுதியில் பீர்முகமது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். நேற்று காலை வாடிக்கையாளர் கேட்ட பொருளை எடுப்பதற்காக கடைக்கு அருகில் இருந்த குடோனுக்கு பீர்முகமது சென்றுள்ளார். அந்த சமயம் வேலை ஆட்கள் யாரும் கடையில் இல்லை. இந்நிலையில் எடுத்து வந்த பொருளை வாடிக்கையாளரிடம் பீர்முகமது கொடுத்துள்ளார். பின்னர் பணப்பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த 42 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு முகமது அதிர்ச்சடைந்தார்.
இதனை அடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மூதாட்டி ஒருவர் முன் பக்க மேஜையில் இருந்த பணக்கட்டை எடுத்து கைப்பைக்குள் போட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து முகமது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மூதாட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.