திடீரென பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அண்ணாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் திடீரென அண்ணா பேருந்து நிறுத்தத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணம் கட்டினால் மட்டுமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி அட்டை வழங்கப்படும் என நிர்பந்தம் செய்யக்கூடாது. எங்கள் பகுதிக்கு பகுதிநேர நியாய விலைக்கடை அமைத்துத் தரவேண்டும். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஏரிக்கரையிலிருந்து நல்ல தண்ணீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை கூறினர். இதற்கு அதிகாரிகள் உங்களுடைய கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.