விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாயி சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் 18 ஆண்டுகளாக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்புகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயி சின்னதுரை, ஆதிசிவம், அஞ்சம்மாள், மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீர்மூழ்கி மோட்டாரை வைக்க பயன்படுத்தும் அட்டையை தலையில் சுமந்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.