தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அணைகளில் வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் இருப்பிடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனால் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றார்கள்.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பல இடங்களில் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. ஆட்சிக்கு வந்து சில மாதங்களான நிலையில் மக்களின் கோபம் திமுக அரசுக்கு எதிராக கிளம்பவில்லை. ஆனால் இந்த முறை கனமழையின் காரணமாக அதே போன்று நிலை ஏற்பட்டால் மக்கள் திமுக அரசு மீது அதிருப்தி கொள்ள நேரிடலாம்.
அதனால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கனமழை வெள்ளம் காரணமாக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தலைமை செயலகத்தில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகின்றார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு போன்றோர் கலந்து கொள்கின்றனர்.